Wednesday, February 19, 2014

சங்கீதமும் சமையலும்"

சொன்னவர்;ஸ்ரீமடம் கைங்கர்ய பரர்கள்.(வேதபுரி)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்....
நன்றி; வானதி பதிப்பகம்.

பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும்.
தானும் பாடுவா.

வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி
கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா?
நீ கேட்கிறியா?"ன்னா, சரீன்னேன், உடனே,
எனக்கு மட்டும் கேட்கிற குரலில்,

' கண்ணா, சந்த்ரமௌளீஸ்வரர் கிட்ட
...வேதபுரி.....வேதபுரி,,,
...இந்தக் கட்டைவிளக்கில்
...நாலு திரிபோட்டு, எண்ணெய் விட்டு,
...ஏத்தி வை, வேதபுரி...

-அப்டீன்னு, சரளமா பாடினா.

விளக்கு ஏற்றி வை-ன்னு உத்தரவு போட்டிருக்கலாம்.
அப்படிச் செய்யல்லே.ரொம்ப நயமா,சொல்லிக்காட்டிட்டா!,

தினம் எல்லோரும் பஞ்சாங்கம் படிக்கணும்.
திதி,வார,நக்ஷத்ர, யோக,கரணம் தெரிஞ்சுக்கிறதினாலே,
நெறைய பலன் உண்டு-ன்னு சொல்லுவா.
தினம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்பா.

கொட்டகைக்குப் போனா, தையல் இலை மேலே
கங்காஜலம் வைக்கணும், ஆசமனத்துக்காக.

எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா,
பெரியவா ! (என்ன, அப்படிக் கண்ணை முழிச்சுப்
பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப்
போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே
பெரியவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்)

"கூட்டு செய்யத் தெரியுமோ"ன்னு ஒரு நாள் கேட்டா.

தெரியாதுன்னேன்.

"நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது.."

"ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு.
கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு.
நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு,
கொத்தமல்லி விதை, தேங்கா அறைச்சு விடு.
மொளகு சீரகம் போடு.
இப்படிப் பண்ணினா,கூட்டு மிச்சமே இருக்காது.."

பெரியவா சொன்னபடியே பண்ணுவேன்.
அப்போ, கூட இருந்த ய்திதிகளும் சாப்பிடுவா.
கூட்டு முழுக்க ஆயிடும்.

-எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !.

Saturday, February 15, 2014

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப்
பார்க்கிறேன், நீ என்னப்பா சொல்கிறாய்?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்

ஒருகால் ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல
தினங்கள் தங்கியிருந்தார்கள். அப்போது ஓர்
ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து
சற்று தூரத்தில் உள்ள ஒரு மடுவிருக்குமிடம்
சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்.
பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள்
சிலரைத் தவிர அங்கு வேறு எவருமில்லை.

அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன்
மனைவியுடன், ஒரு பையனைக் கையில்
பிடித்து அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.
அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம்
செய்து எழுந்தனர். ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களை
உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை.

வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன்
இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து
கொள்கிறான்.பெரியவாள் கருணை புரிய வேண்டும்"
என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள்.
பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறிது நேரம் மௌனமாக
இருந்தார்கள்.சில நிமிஷங்கள் கழிந்தபின் பேச
ஆரம்பித்தார்கள்;

(பெரியவாள்-பல கதைகளை அவர்களுக்கு சொன்னார்கள்
ஹஸ்தாமலகர்,ஜடபரதர்,மூகன்,சேஷாத்ரி ஸ்வாமிகள்
பின் ஒரு நாள் அதை தட்டச்சு செய்கிறேன்)

அந்த தம்பதிகளைக் காட்டிலும், அந்த புத்திஸ்வாதீன-
மில்லாத பையன் மிகவும் கவனமாகக் கேட்டுக்
கொண்டிருந்ததை பெரியவர்கள் கவனித்தார்கள்.

சில நிமிஷங்கள் மௌனத்திற்குப் பின் ஸ்ரீ பெரியவாள்
மறுபடி சொன்னார்கள்.

"என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள்.
ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதிகள் தங்கள்
பிள்ளையுடன் வந்தார்கள். அந்தப் பையன், ஆறு
மாதமாகப் பல் தேய்ப்பதில்லை,சாப்பிடுவதில்லை,
துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால்
அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை.வேஷ்டியில்
அழுக்கு ஏற்படுவதில்லை என்று சொன்னார்கள். பிறகு
கண்ணீர் வடிய, "அவன் சாப்பிடாமல் பட்டினியாக
இருக்கும்போது, நாங்கள் சாப்பிடுவது மனத்திற்கு
மிகவும் கஷ்டமாக உள்ளது" என்றார்கள்.

"அவனால் ஏதாவது சிரமம் இருக்கா?" என்று நான்
(பெரியவர்கள்) கேட்டேன். அதற்கு அவர்கள்
உபத்ரம் ஏதுமில்லையென்றும், அவன் யாரிடமும்
பேசுவதில்லை என்றும், எப்போதாவது,'ஸ்ரீராம சிவ'
என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர்கள்
சொன்னார்கள்.

நான் (பெரியவர்கள்) இவனும் ஒரு மகான்தான்.
நீங்கள் சாப்பிடும்போது. கொஞ்சம் சாதம்,குழம்பு
ஆகியவைகளை,ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல்,
பையன் இருக்குமிடத்தில் வைத்துவிடுங்கள்.அவன்
சாப்பிடாவிட்டால் சாயங்காலம் அவைகளை எடுத்து
யாராவது ஏழைகளுக்குக் கொடுங்கள் என்று சொன்னேன்.

பிறகு இன்று சில வேறு பைத்தியங்களைப் பற்றி
ஸ்ரீ பெரியவர்கள் கூறினார்கள்.மறுபடி கேட்டுக்கொண்டிருந்த
தம்பதிகளையும்,பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவர்கள்
கூறியதாவது;

"வன்முறையில் ஈடுபடும் புத்திஸ்வாதீனமில்லாதவர்களுக்-
குத்தான் வைத்யம் தேவை.எவருக்கும் எந்தத் தொந்தரவும்
கொடுக்காத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் பற்றி
அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம்.சொல்லப்போனால்
அவர்கள் ஞானிகளாகலாம்.அவர்கள் கெடுதி செய்ய
மாட்டார்கள்.பாபகார்யங்களைச் செய்யமாட்டார்கள்.
அவர்களுக்குத் துவேஷம் கிடையாது,அவர்களைப்
பார்க்கும்போது,

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப்
பார்க்கிறேன், நீ என்னப்பா சொல்கிறாய்?" என்று
சிரித்தபடி ஸ்ரீ பெரியவாள் முன் உட்கார்ந்திருந்த
அந்தப் பையனை நோக்கிக் கேட்டார்கள்.அந்தப்
பையனும் சிரித்தான்.

அந்தப் பையனின் பெற்றோர்கள், ஸ்ரீபெரியவர்கள்
வெகு நேரம் பேசியதைக் கேட்டு,பையனைப்
பற்றிய வருத்தமும்,மனக்கவலையும் குறைந்தவர்களாக,
தெளிவுடனும்,மனச்சாந்தியும் அடைந்தவர்களாக,
விடைபெற்றுச் சென்றனர்.

அருகிலிருந்து பெரியவர்கள் பேசியதனைத்தையும்,
கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட
பேச்சை மறக்கவே முடியாது.