Tuesday, August 26, 2014

Poojai and Naivedyam

மகாபெரியவா சொல்லிக்கொடுக்கும் பஞ்சாயதன பூஜை “”தென்புலத்தார், தெய்வம்..." என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.ஆபீஸ்க்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும். இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம். வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராட்சைப்பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம். ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராட்சை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம். இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேளை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம். பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன். வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்?. வெறுமே அவரிடம் காட்டுகிறோம்!. பிறகு நாம்தான் புசிக்கிறோம். நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. நிவேதயாமி என்றால் அறிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா???. செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும் கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம். எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம். அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்

Wednesday, February 19, 2014

சங்கீதமும் சமையலும்"

சொன்னவர்;ஸ்ரீமடம் கைங்கர்ய பரர்கள்.(வேதபுரி)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்....
நன்றி; வானதி பதிப்பகம்.

பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும்.
தானும் பாடுவா.

வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி
கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா?
நீ கேட்கிறியா?"ன்னா, சரீன்னேன், உடனே,
எனக்கு மட்டும் கேட்கிற குரலில்,

' கண்ணா, சந்த்ரமௌளீஸ்வரர் கிட்ட
...வேதபுரி.....வேதபுரி,,,
...இந்தக் கட்டைவிளக்கில்
...நாலு திரிபோட்டு, எண்ணெய் விட்டு,
...ஏத்தி வை, வேதபுரி...

-அப்டீன்னு, சரளமா பாடினா.

விளக்கு ஏற்றி வை-ன்னு உத்தரவு போட்டிருக்கலாம்.
அப்படிச் செய்யல்லே.ரொம்ப நயமா,சொல்லிக்காட்டிட்டா!,

தினம் எல்லோரும் பஞ்சாங்கம் படிக்கணும்.
திதி,வார,நக்ஷத்ர, யோக,கரணம் தெரிஞ்சுக்கிறதினாலே,
நெறைய பலன் உண்டு-ன்னு சொல்லுவா.
தினம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்பா.

கொட்டகைக்குப் போனா, தையல் இலை மேலே
கங்காஜலம் வைக்கணும், ஆசமனத்துக்காக.

எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா,
பெரியவா ! (என்ன, அப்படிக் கண்ணை முழிச்சுப்
பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப்
போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே
பெரியவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்)

"கூட்டு செய்யத் தெரியுமோ"ன்னு ஒரு நாள் கேட்டா.

தெரியாதுன்னேன்.

"நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது.."

"ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு.
கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு.
நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு,
கொத்தமல்லி விதை, தேங்கா அறைச்சு விடு.
மொளகு சீரகம் போடு.
இப்படிப் பண்ணினா,கூட்டு மிச்சமே இருக்காது.."

பெரியவா சொன்னபடியே பண்ணுவேன்.
அப்போ, கூட இருந்த ய்திதிகளும் சாப்பிடுவா.
கூட்டு முழுக்க ஆயிடும்.

-எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !.

Saturday, February 15, 2014

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப்
பார்க்கிறேன், நீ என்னப்பா சொல்கிறாய்?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்

ஒருகால் ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல
தினங்கள் தங்கியிருந்தார்கள். அப்போது ஓர்
ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து
சற்று தூரத்தில் உள்ள ஒரு மடுவிருக்குமிடம்
சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்.
பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள்
சிலரைத் தவிர அங்கு வேறு எவருமில்லை.

அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன்
மனைவியுடன், ஒரு பையனைக் கையில்
பிடித்து அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.
அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம்
செய்து எழுந்தனர். ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களை
உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை.

வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன்
இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து
கொள்கிறான்.பெரியவாள் கருணை புரிய வேண்டும்"
என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள்.
பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறிது நேரம் மௌனமாக
இருந்தார்கள்.சில நிமிஷங்கள் கழிந்தபின் பேச
ஆரம்பித்தார்கள்;

(பெரியவாள்-பல கதைகளை அவர்களுக்கு சொன்னார்கள்
ஹஸ்தாமலகர்,ஜடபரதர்,மூகன்,சேஷாத்ரி ஸ்வாமிகள்
பின் ஒரு நாள் அதை தட்டச்சு செய்கிறேன்)

அந்த தம்பதிகளைக் காட்டிலும், அந்த புத்திஸ்வாதீன-
மில்லாத பையன் மிகவும் கவனமாகக் கேட்டுக்
கொண்டிருந்ததை பெரியவர்கள் கவனித்தார்கள்.

சில நிமிஷங்கள் மௌனத்திற்குப் பின் ஸ்ரீ பெரியவாள்
மறுபடி சொன்னார்கள்.

"என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள்.
ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதிகள் தங்கள்
பிள்ளையுடன் வந்தார்கள். அந்தப் பையன், ஆறு
மாதமாகப் பல் தேய்ப்பதில்லை,சாப்பிடுவதில்லை,
துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால்
அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை.வேஷ்டியில்
அழுக்கு ஏற்படுவதில்லை என்று சொன்னார்கள். பிறகு
கண்ணீர் வடிய, "அவன் சாப்பிடாமல் பட்டினியாக
இருக்கும்போது, நாங்கள் சாப்பிடுவது மனத்திற்கு
மிகவும் கஷ்டமாக உள்ளது" என்றார்கள்.

"அவனால் ஏதாவது சிரமம் இருக்கா?" என்று நான்
(பெரியவர்கள்) கேட்டேன். அதற்கு அவர்கள்
உபத்ரம் ஏதுமில்லையென்றும், அவன் யாரிடமும்
பேசுவதில்லை என்றும், எப்போதாவது,'ஸ்ரீராம சிவ'
என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர்கள்
சொன்னார்கள்.

நான் (பெரியவர்கள்) இவனும் ஒரு மகான்தான்.
நீங்கள் சாப்பிடும்போது. கொஞ்சம் சாதம்,குழம்பு
ஆகியவைகளை,ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல்,
பையன் இருக்குமிடத்தில் வைத்துவிடுங்கள்.அவன்
சாப்பிடாவிட்டால் சாயங்காலம் அவைகளை எடுத்து
யாராவது ஏழைகளுக்குக் கொடுங்கள் என்று சொன்னேன்.

பிறகு இன்று சில வேறு பைத்தியங்களைப் பற்றி
ஸ்ரீ பெரியவர்கள் கூறினார்கள்.மறுபடி கேட்டுக்கொண்டிருந்த
தம்பதிகளையும்,பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவர்கள்
கூறியதாவது;

"வன்முறையில் ஈடுபடும் புத்திஸ்வாதீனமில்லாதவர்களுக்-
குத்தான் வைத்யம் தேவை.எவருக்கும் எந்தத் தொந்தரவும்
கொடுக்காத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் பற்றி
அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம்.சொல்லப்போனால்
அவர்கள் ஞானிகளாகலாம்.அவர்கள் கெடுதி செய்ய
மாட்டார்கள்.பாபகார்யங்களைச் செய்யமாட்டார்கள்.
அவர்களுக்குத் துவேஷம் கிடையாது,அவர்களைப்
பார்க்கும்போது,

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப்
பார்க்கிறேன், நீ என்னப்பா சொல்கிறாய்?" என்று
சிரித்தபடி ஸ்ரீ பெரியவாள் முன் உட்கார்ந்திருந்த
அந்தப் பையனை நோக்கிக் கேட்டார்கள்.அந்தப்
பையனும் சிரித்தான்.

அந்தப் பையனின் பெற்றோர்கள், ஸ்ரீபெரியவர்கள்
வெகு நேரம் பேசியதைக் கேட்டு,பையனைப்
பற்றிய வருத்தமும்,மனக்கவலையும் குறைந்தவர்களாக,
தெளிவுடனும்,மனச்சாந்தியும் அடைந்தவர்களாக,
விடைபெற்றுச் சென்றனர்.

அருகிலிருந்து பெரியவர்கள் பேசியதனைத்தையும்,
கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட
பேச்சை மறக்கவே முடியாது.

Friday, January 24, 2014

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் அருகில் உள்ள தலங்களை சென்று தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.

குபேரன் வழிபட்ட ‘வாஸ்து’ காளிகாம்பாள்

சென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. இத்தலத்துக்கு பல சிறப்புகள் உண்டு. வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்ட ஸ்தலம். இத்தலம் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஈசான்ய திசையிலும், மயிலை கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு தெற்கிலும், திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்துப்படி அமையப் பெற்ற தலமாகும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்கு உள்ளது.

நல்வாழ்வு தரும் மயிலை கற்பகாம்பாள்

சென்னை மாநகரின் பிரசித்தி பெற்ற ஸ்தலம் மயிலாப்பூர். இங்கு கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் அருள் புரிகிறார்கள். தல வரலாறுபடி சிவனை மயில் வடிவில் வழிபட்டதால் மயிலாப்பூர் என பெயர் ஏற்பட்டது. இது பாடல் பெற்ற ஸ்தலமாகும். சர்வரோக நிவாரண ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் - அம்பாளை மனமுருக பிரார்த்தித்தால் சகல நோய்களும் நீங்கி, ஆரோக்கியமான, வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

குடிசையில் அருளும் முண்டகக் கண்ணி

சென்னை மயிலாப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் இத்தலம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி. இங்கு அம்மன் சன்னதியில் கருவறை விமானம் கிடையாது. அம்மன் விருப்பம் அது என்பதால், காலம் காலமாக கீற்றுக் கொட்டைகைக்குள் இருந்தபடி அருள் பாலிக்கிறாள்.

ஞானம் தரும் முப்பெரும் நாயகிகள்

கொடியிடைநாயகி: சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம். திருவுடைநாயகி: சென்னை - பொன்னேரி மார்க்கத்தில் மீஞ்சூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம்.வடிவுடைநாயகி: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.இந்த மூன்று அம்மன்களையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமிகளில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. ஒரே நாளில் மூன்று அம்மனையும் தரிசித்தால் சகல பாக்யங்களும் விருத்தியாகும். குறிப்பாக கல்வி, கலைகள், ஞானம் சிறக்கும். மாணவர்கள் பவுர்ணமியன்று தரிசிக்க கல்வியில் மேன்மை
அடைவார்கள்.

திருமண தோஷம் நீக்கும் கருமாரி

சென்னை - பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே திருவேற்காடு உள்ளது. வேலமரங்கள் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு என பெயர் பெற்றது. அன்னை பராசக்தியே கருமாரி அம்மனாக அருள் புரிகிறாள். இத்தலத்தில் மிகப்பெரிய புற்றுக் கோயில் உள்ளது. திருமணத் தடை, திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.

பதவி உயர்வு அளிக்கும் மாங்காடு காமாட்சி

சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ளது மாங்காடு. இத்தலத்து அம்பாள் உக்கிரமாக தவமிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள். ஆதிசங்கரரால் போற்றி துதிக்கப்பட்ட ஸ்தலம். உத்யோகத்தில் பிரச்னை இருப்பவர்கள், பதவி உயர்வு தடைபடுபவர்கள். இங்கு வேண்டிக்கொண்டால் உத்யோகம், தொழிலில் இருக்கும் தடை, தடங்கல்களை அகற்றி நல்வாழ்வு அருள்வாள்.

பாவங்கள் போக்கும் பெரியபாளையம் பவானி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தில் பவானி அம்மன் அருள்புரிகிறாள். ஆடி திருவிழா இங்கு 10 வாரங்கள் வெகு விமரிசையாக நடக்கும். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பலர் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவார்கள். உடம்பில் வேப்பிலை கட்டி கோயிலை பிரதட்சணம் செய்தால் சகல பாவங்களையும் போக்கி பெரியபாளையத்தாள் வளமான வாழ்வு தருவாள் என்பது நம்பிக்கை.

சுக்கிர தோஷம் நீக்கும் ஆனந்தவல்லி

சென்னையின் மைய பகுதியில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இந்த அம்பாள் அருள் புரிகிறாள். அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. இது சிவ ஸ்தலம் என்றாலும், இங்கு சுக்கிரவார அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்கிரபகவான் தோஷம் நீக்கும் ஸ்தலம் என்பதால் சுக்கிரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இது பரிகார ஸ்தலமாகும். களத்திர தோஷம், சுக்கிரதோஷம் திருமண தடை போன்றவற்றுக்கு இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். கண்நோய், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வந்து வழிபட ரோக நிவாரணம் ஏற்படும். இங்கு பல்லக்கு தூக்கி நேர்த்திக் கடன் செலுத்துவது சிறந்த பரிகாரமாகும். சுக்கிரவார அம்மனின் பல்லக்கை பெண்களே தூக்கி வருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

குழந்தை வரம் தரும் புட்லூர் அம்மன்

சென்னை - திருவள்ளூர் செல்லும் வழியில் காக்களூர் அருகே புட்லூர் என்ற இத்தலம் உள்ளது. இங்கு அம்மன் வித்தியாசமாக கர்ப்பிணிப் பெண் வடிவில் கால் நீட்டி படுத்து ஆசி வழங்குகிறாள். இத்தலத்தின் உள்ளே செல்வதே மெய்சிலிர்க்கும் அனுபவம். மஞ்சள், குங்கும வாசனையுடன் தெய்வீக அருள் பொதிந்து இருக்கும் தலம். இது குழந்தை பாக்ய ஸ்தலமாகும். குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் மனதார பிரார்த்தித்தால் குழந்தை பாக்யம் உண்டாகும். கர்ப்பிணிகள் வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும்.

வழக்கு, விவகாரங்கள் தீர்க்கும் மதுரகாளி

சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இந்த அம்பாள் அருள்புரிகிறாள். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய வழிபாட்டு முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும். மற்ற தினங்களில் உற்சவரை மட்டுமே தரிசிக்கலாம். கோர்ட், வழக்குகள், மனநல பாதிப்பு போன்றவற்றுக்கு அம்மன் நிவாரணம் தருவாள் என்பது நம்பிக்கை. மதுரையை எரித்த கண்ணகிதான் சினம் தணிந்து மதுரகாளியாக வீற்றிருக்கிறாள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

கண்டுபிடித்து கொடுக்கும் அரைக்காசு அம்மன்

சென்னை - வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் அம்பாள் பார்வதிதேவி அம்சமாக நான்கு கரங்களுடன் அமர்ந்து இருக்கிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் இங்கு விசேஷம். இத்தலத்து அம்மனை வேண்டிக் கொண்டால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைப்பதாக நம்பிக்கை, மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் தருபவளாக இருக்கிறாள். இத்தலத்துக்கு அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் கோயில் அமைந்துள்ளது.

திருஷ்டிகள் நீக்கும் காஞ்சி காமாட்சி

மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற ஸ்தலம் காஞ்சிபுரம். ஊரின் மையப் பகுதியில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்று. இதற்கு காமகோடி பீடம் என்று பெயர். இத்தலத்து அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது. இங்குள்ள ஸ்ரீசக்கிரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சகல திருஷ்டி தோஷங்களை நீக்கும் சக்தி உடையது. ஆனந்தலஹரி என்ற ஸ்தோத்திரத்தை இங்குதான் ஆதிசங்கரர் பாடினார். இது நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாகும். இங்கு பஞ்ச காமாட்சிகள் அருள்புரிகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மன் தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோமாக!

‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
உத்தமர் மனதில் உதித்த ஓரிக்கை பெரியவர் கோயில்!

(இன்றைய-தினமலரில் வந்த தகவல்)24-01-2014.

சிவனுக்கு மனதிலே கோயில் எழுப்பிய பூசலார் நாயனார் போல, காஞ்சிப்பெரியவருக்கு மனதில் கோயில் கட்டியவர் பிரதோஷம் மாமா. இவரை மகாபெரியவரே, "64வது நாயன்மார்' என பாராட்டியுள்ளார்.

மனம், மொழி, மெய்களால் எப்போதும் பெரியவரின் நினைவாக வாழ்ந்தவர் இவர். பெரிய வளாகம், புனித குளம், நந்தவனம், கோசாலை, யாகசாலை, வேதபாடசாலை, மணிமண்டபம் என கோயிலுக்கான அத்தனை அம்சங்களும் அவர் கற்பனை செய்த கோயிலில் இருந்தது. அதற்கு, பெரிய அளவில் நிலம் தேவைப்பட்டது. ஆனாலும், "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதாவது' என்று யாரும் சொல்லாத அளவில், அவரை இயக்குவதே பெரியவர் தான் எனச் சொல்லும்படியான அதிசயம் நிகழ்ந்தது.

பிரதோஷ மாமா உத்தரவின்படி, இரு அன்பர்கள் பொருத்தமான நிலத்தை காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கையில் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் அது குறித்த விஷயத்தை தெரிவித்தபோது, மின்விளக்கின் ஒளி மங்கி, பின் பிரகாசமானது. சுப சகுனமான அதைக் கண்டு மகிழ்ந்த மாமா, பெரியவரிடம் ஆசி பெற மடத்திற்கு புறப்பட்டார். அங்கே, பெரியவர் தான் ஒரு கனவு கண்டதாக சொன்னதும், மெய்சிலிர்த்துப் போனார். அந்தக் கனவும் நிலம் சம்பந்தமாகவே இருந்தது.

""வந்தவாசி செல்லும் வழியில், ஒரு மணல்மேடு. அங்கு குழந்தைகள் விளையாடிண்டு இருந்தா.... திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் ஒரே பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன்!'' என்றார் அவரிடம்.

பெரியவரே அருள்வாக்குபோல, தான் நினைத்ததைச் சொன்னதும், மாமாவின் கண்களில் ஒரே ஆனந்தக் கண்ணீர்!

நிலத்திற்கான பெருந்தொகையை, நாயன்மாரின் பக்தி என்னும் மூலதனமே சம்பாதித்துக் கொடுத்தது. 1992ல், 17 அக்னி ஹோத்ரிகள் மூலம் ஸ்ரீசுக்த ஹோமத்தை சிரத்தையுடன் நடத்தினார். சிற்ப வேலை தொடங்கியது. 1993, 94ல் பெரியவர் ஜெயந்தி விழா நாட்களில் இங்கு ருத்ரஹோமம் நடத்தப்பட்டது.

1993 முதல் 1997 வரை கோயில் பணி சிறப்பாக நடக்க, நித்யஹோமம் நடந்தது. மாதம்தோறும் சிவராத்திரி விரதம் இருந்து, பெரியவரின் பக்தர்கள் கோயில்பணி குறையின்றி நிறைவேற நான்கு கால பூஜை செய்தனர். வேதபாடசாலை மாணவர்கள் கோடி அர்ச்சனை மூலம் வேண்டிக் கொண்டனர். பெரியவரின் மனம் குளிர்வதற்காக, 1008 லிட்டர் பால், 1008 இளநீர் அபிஷேகம் மூன்றுமுறை நடத்தப்பட்டது.

இந்த திருப்பணியில் அனைவரும் பங்கேற்க, ஸ்ரீமஹாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட்'என்னும் நிறுவனத்தை ஏற்படுத்திய பின், கோயில் பணி வேகமாக நிறைவேறியது. பிரதோஷ சிவன் என போற்றப்படும் மாமாவின் தவவலிமையால் உயர்ந்து நிற்கும் ஓரிக்கை காஞ்சிப்பெரியவர் கோயில், என்றென்றும் நமக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Friday, December 27, 2013



ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம்

ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம் மிகவும் மகிமை வாய்ந்த ஸ்லோகங்களுள் ஒன்று. அனுதினமும் இதனைப் பாராயணம் செய்வதால், சர்வ ரோகங்களும் ஸ்ரீகுருவாயூரப்பனின் க்ருபையால் நீங்கும். குறிப்பாக, வாத நோய்களிலிருந்து பூரண குணமடைய இதைப் பக்தியுடன் தினமும் பாராயணம் செய்ய வேண்டும். பாராயண முடிவில், எளிய நிவேதனங்கள் (சர்க்கரையிட்ட பால், உலர் பழங்கள் முதலியன) செய்து வழிபடலாம்.

|| ஸ்ரீ குருப்யோ நம:||

குந்தஸூம ப்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம்
நந்தகுல நந்தபர துந்தலன கந்தம் |
பூத நிஜ கீத லவ தூத துரிதம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

நீலதர ஜாலதர பாலஹரி ரம்யம்
லோலதர ஸீலயுத பாலஜன லீலம் |
ஜாலநதி ஸீலமபி பாலயிது காமம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கம்ஸரண ஹிம்ஸ மிஹ ஸம்ஸரண ஜாத‌
க்லாந்திபர ஸாந்திகர காந்திஜர வீதம் |
வாதமுக தாது ஜனி பாத பயகாதம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ஜாதுதுரி பாதுக மிஹாதுர ஜனம் த்ராக்
ஸோக பரமூகமபி தோக மிவ பாந்தம் |
ப்ருங்கருசி ஸங்கர க்ருதங்கலதிகம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபபவ தாபபர கோபஸ மநார்த்தா
ஸ்வாஸ கர பாஸ ம்ருதுஹாஸருசி ராஸ்யம் |
ரோக சய போக பய வேக ஹர மேகம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கோஷமுல தோஷஹர வேஷமுப யாந்தம்
பூஷஸத தூஷக விபூஷண கணாட்யம் |
புக்திமபி முக்திமதி பக்திஷூத தானம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபக தூரப மதி தாப ஹர ஸோப‌
ஸ்வாப கன மாபததுமபாதி ஸமேதம் |
தூனதர தீன ஸூக தானக்ருத தீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாதபத தாதரண மோத பரிபூர்ணம்
ஜீவமுக தேவஜன ஸேவன பலாங்க்ரிம்
ரூக்ஷ பவ மோக்ஷக்ருத தீக்ஷ நிஜ வீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ப்ருத்ய கண பத்யுதித நுச்யுசித மோதம்
ஸ்டஷ்டமித மஷ்டக மதுஷ்ட கரணார்ஹம் |
ஆததத மாதரத மாதிலய ஸூன்யம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

|| ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து ||

Monday, December 23, 2013

மகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி

(திரு.சுவாமிநாதன் ZEE-T.V.யில்-சொன்னதும் முன்பே நான்
படித்ததும்)

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். பல முக்கிய முடிவுகளை அவர் இங்கிருந்து தான் எடுப்பது வழக்கம். பல வி.ஐ.பி.க்களை இங்கு வைத்து சாதிப்பதும் வழக்கம். அவர்கள் அவ்வாறு அமர்ந்திருக்கும்போது சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். ஆனால் பரமாச்சாரியார் மட்டும் எதையும் சட்டை செய்யாமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொசு கடிப்பதர்க்கான ஒரு சிறு தடயத்தை கூட அவர் காட்டமாட்டார்.

அந்தக் கொட்டகையில் உள்ள பசு ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. மடத்தின் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல மொத்தம் ஆறுபேர் வந்திருந்தனர். பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர்.

கன்றுக் குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் துணுக்குற்றனர். இதை எப்படி பெரியவரிடம் போய் சொல்வது. பசுவை அன்னை காமாட்சியின் சொரூபமாகவே பார்த்து வழிபடுபவராயிற்றே அவர். இருப்பினும் இந்த முக்கிய விஷயத்தை அவரிடம் சொல்லத் தானே வேண்டும்? நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.

அமைதியாக கேட்ட அவர் பின்னர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். கீழே ஒரு தன துண்டை விரித்துப் போட்டார் பசுவின் எதிரே அமர்ந்தார். கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அந்த பசுவை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அது பிரசவித்தது. அதன் வயிற்றில் இருந்த அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது. வெளியே வந்த கன்று அதற்கே உரிய துள்ளலுடன் எழுந்து நின்றது. தாய் மடி தேடி சென்றது.

எஸ்…. இறந்து போனது என்று ஆறு டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்த பின் மகான் அவர் பாட்டுக்கு உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் இதை நம்பமுடியவில்லை. மருத்தவத்தையும் விஞ்சிய அற்புதமல்லவா இது ? அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.

மடத்தின் சிப்பந்திகளுக்கு பரமாச்சாரியாளின் மற்றொரு மகிமையை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.