Friday, January 24, 2014

உத்தமர் மனதில் உதித்த ஓரிக்கை பெரியவர் கோயில்!

(இன்றைய-தினமலரில் வந்த தகவல்)24-01-2014.

சிவனுக்கு மனதிலே கோயில் எழுப்பிய பூசலார் நாயனார் போல, காஞ்சிப்பெரியவருக்கு மனதில் கோயில் கட்டியவர் பிரதோஷம் மாமா. இவரை மகாபெரியவரே, "64வது நாயன்மார்' என பாராட்டியுள்ளார்.

மனம், மொழி, மெய்களால் எப்போதும் பெரியவரின் நினைவாக வாழ்ந்தவர் இவர். பெரிய வளாகம், புனித குளம், நந்தவனம், கோசாலை, யாகசாலை, வேதபாடசாலை, மணிமண்டபம் என கோயிலுக்கான அத்தனை அம்சங்களும் அவர் கற்பனை செய்த கோயிலில் இருந்தது. அதற்கு, பெரிய அளவில் நிலம் தேவைப்பட்டது. ஆனாலும், "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதாவது' என்று யாரும் சொல்லாத அளவில், அவரை இயக்குவதே பெரியவர் தான் எனச் சொல்லும்படியான அதிசயம் நிகழ்ந்தது.

பிரதோஷ மாமா உத்தரவின்படி, இரு அன்பர்கள் பொருத்தமான நிலத்தை காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கையில் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் அது குறித்த விஷயத்தை தெரிவித்தபோது, மின்விளக்கின் ஒளி மங்கி, பின் பிரகாசமானது. சுப சகுனமான அதைக் கண்டு மகிழ்ந்த மாமா, பெரியவரிடம் ஆசி பெற மடத்திற்கு புறப்பட்டார். அங்கே, பெரியவர் தான் ஒரு கனவு கண்டதாக சொன்னதும், மெய்சிலிர்த்துப் போனார். அந்தக் கனவும் நிலம் சம்பந்தமாகவே இருந்தது.

""வந்தவாசி செல்லும் வழியில், ஒரு மணல்மேடு. அங்கு குழந்தைகள் விளையாடிண்டு இருந்தா.... திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் ஒரே பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன்!'' என்றார் அவரிடம்.

பெரியவரே அருள்வாக்குபோல, தான் நினைத்ததைச் சொன்னதும், மாமாவின் கண்களில் ஒரே ஆனந்தக் கண்ணீர்!

நிலத்திற்கான பெருந்தொகையை, நாயன்மாரின் பக்தி என்னும் மூலதனமே சம்பாதித்துக் கொடுத்தது. 1992ல், 17 அக்னி ஹோத்ரிகள் மூலம் ஸ்ரீசுக்த ஹோமத்தை சிரத்தையுடன் நடத்தினார். சிற்ப வேலை தொடங்கியது. 1993, 94ல் பெரியவர் ஜெயந்தி விழா நாட்களில் இங்கு ருத்ரஹோமம் நடத்தப்பட்டது.

1993 முதல் 1997 வரை கோயில் பணி சிறப்பாக நடக்க, நித்யஹோமம் நடந்தது. மாதம்தோறும் சிவராத்திரி விரதம் இருந்து, பெரியவரின் பக்தர்கள் கோயில்பணி குறையின்றி நிறைவேற நான்கு கால பூஜை செய்தனர். வேதபாடசாலை மாணவர்கள் கோடி அர்ச்சனை மூலம் வேண்டிக் கொண்டனர். பெரியவரின் மனம் குளிர்வதற்காக, 1008 லிட்டர் பால், 1008 இளநீர் அபிஷேகம் மூன்றுமுறை நடத்தப்பட்டது.

இந்த திருப்பணியில் அனைவரும் பங்கேற்க, ஸ்ரீமஹாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட்'என்னும் நிறுவனத்தை ஏற்படுத்திய பின், கோயில் பணி வேகமாக நிறைவேறியது. பிரதோஷ சிவன் என போற்றப்படும் மாமாவின் தவவலிமையால் உயர்ந்து நிற்கும் ஓரிக்கை காஞ்சிப்பெரியவர் கோயில், என்றென்றும் நமக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment