Wednesday, May 22, 2013

பக்தி,குலதெய்வம் பற்றி மகா பெரியவா;

இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில்>>>

மகா பெரியவாளின் பக்தி விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். எது பக்தி என்பதில் தொடங்கி, அந்த பக்தியின் பலவித நிலைப்பாடுகளை துளியும் கருத்து பேதத்துக்கு இடமின்றி கூறிவரும் பெரியவர், ஆதிசங்கர பகவத் பாதர், எதை பக்தி என்று சொன்னார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பகவத் பாதரின் சிவானந்த லஹரியில் எது பக்தி என்பதற்கான விளக்கத்தை நாமும் காணலாம். ஒருவரின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்றால், அது ஐந்துவிதமாய் இருக்கலாமாம். ஒன்று அழிஞ்சில் விதை; அடுத்தது இரும்பு ஊசி; மூன்றாவது பதி விரதை; நான்கு, மரத்தைப் பற்றிக் கொள்ளும் கொடி; ஐந்தாவது ஓடும் நதி – என்று ஐந்து உதாரணங்களை பகவத் பாதர் அடுக்குகிறார்.

முதல் உதாரணம், அழிஞ்சில் விதை!

அழிஞ்சில் மரம் என்று ஒன்று உண்டு. இதன் விதைகள் மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே நிலத்தில் விழும். சில மணி நேரத்திலேயே மண்ணோடு மண்ணாக ஆகிவிடாமல், அந்த மரத்தின் அடிப்பாகத்தோடு சென்று ஒட்டிக்கொண்டு அப்படியே அதோடு கலந்துவிடுமாம். நம் பக்தி பாவமும் இறைவனோடு இப்படிக் கலந்துவிடும் விதமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது ஊசி. இந்த ஊசி, காந்தத்தை எங்கே கண்டாலும் போய் ஒட்டிக் கொண்டுவிடும். நாமும் இந்த ஊசிபோல இறைவனோடு ஒட்டிக் கொண்டுவிட வேண்டும். மூன்றாவது பதிவிரதை. இவளுக்கு, கணவன்தான் உலகம். கணவன்தான் கடவுள். இவனுக்கு மிஞ்சி எதுவுமே இவள் வரையில் கிடையாது. நான்காவது தாவரக் கொடி வகைகள். இந்தக் கொடி வகைகள் அழகாக அருகில் வளர்ந்திருக்கும் மரத்தைப் பற்றிக் கொண்டு மேலேறத் தொடங்கிவிடும். இது மரத்தைப் பற்றிக் கொள்வதைப் போல், நம் மனம் இறைவனைப் பற்றிக் கொண்டுவிட வேண்டும்.

ஐந்தாவது நதி. நதியின் சங்கமம் சமுத்திரத்தில்! நாமும் அதுபோல ஆண்டவனிடம் பக்தி கொண்டு அவனோடு சங்கமித்துவிட வேண்டும்.

இந்த ஐந்து உதாரணங்களிலும் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், அழிஞ்சில் விதையோ, இல்லை ஊசியோ, அதுவுமில்லை கொடியோ, நதியோ – யோசித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற திராணியற்றவை இவை. யோசிக்கும் திராணி இருந்தும் பதிவிரதை ஆனவள், ‘நான் யோசிக்கத் தயாரில்லை; எனக்கு பதியே எல்லாம்’ என்பவள். ஆக, இங்கே இரு இயற்கையான இயல்புத் தன்மை இருப்பதைப் பார்க்கலாம்.

அழிஞ்சில் விதை, மரத்தோடு ஒட்டிக் கொள்வதன் பின்னே அதன் முனைப்பு அதிகம்; ஊசி காந்தத்தோடு கலப்பதில் காந்தத்தின் முனைப்பு அதிகம்; கொடி படர்வதில் கொடியின் முனைப்பு அதிகம்; நதி, கடலோடு கலப்பதில் நதியின் முனைப்பே அதிகம்.

பதிவிரதைக்கு வருவோம்.

இன்றைக்கு நமது சதிகள் சமத்துவம் பேசி, கணவனை பேர் சொல்லி அழைத்து ஒரு படி மேலே போய், ‘வாடா போடா’வென்று கூட அழைத்து உறவு கொண்டாடி வருகிறார்கள். காரணம், சமத்துவம் என்னும் எண்ணம்! இப்படி மனித புத்தி எண்ணும் என்பது ஆதிசங்கரருக்குத் தெரியாதா என்ன?

ஆனால், அப்படி சிலர் எண்ணினாலும், எண்ணாது பதிபக்தி காட்ட முடிந்த பெண்ணே, இங்கே அவர் வரையில் பக்திக்கு நல்ல உதாரணமாகப் படுகிறாள்.

சொல்லப்போனால், இந்த சதியே மிகச்சிறந்த உதாரணம். மற்றவை இயல்பான தன்மையால் நிகழ்பவை. ஆனால், சதியோ இந்த சமத்துவ சிந்தனை கடந்து, கணவனிடம் அழுக்குகள் தென்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது, அவன்பால் பக்தி செலுத்த வேண்டும், அதுவும் இந்த நாளில்!

இது என்ன சாதாரண விஷயமா?

இப்படி ஐந்து விதமாய் பக்தி புரியலாம். புரிய வேண்டும் என்னும் பகவத் பாதரின் கருத்தை வழிமொழியும் நமது பெரியவர், இப்படி எல்லாம் பக்தி செலுத்த முடியாவிட்டால்கூட பாதகமில்லை.

பொன் வேண்டும் – பொருள் வேண்டும் என்று கேட்டுக்கூட பக்தியைத் தொடங்குங்கள். இது வியாபார பக்தி. பாதகமில்லை. ஒருநாள் இல்லை ஒருநாள், இந்த வியாபார பக்திக்குள்ளும் ஒரு தெளிவு கட்டாயமாக வரும். அப்போது வருத்தமும் வரும்.

அடடே! உலகையே எனக்குத் தந்த கடவுளிடம் அற்பமாய், ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேனே!

ஆற்றங்கரையோரமாக ஆற்றில் கால் நனைய நிற்கும் ஒருவன் தாகத்தில் தவிக்கத் தொடங்குகிறான். குனிந்து ஒருவாய் அள்ளிக் குடித்தால் தாகம் தீர்ந்து விடும். ஆனால் அதுகூட தெரியாமல், ‘நான் தாகத்தால் தவிக்கிறேன். எனக்குத் தண்ணீர் கொடு’ என்று கேட்கிறான். அவனைப் பார்த்து கடவுளுக்கு பரிதாபம் வருமா, கோபம் வருமா?

நாமும் கடவுள் நம்மைப் பார்த்து கோபப்படும் படியாகவே, அவன் அள்ளித் தந்ததை உணராமல், இனிதான் அவன் தரவேண்டும் என்பதுபோல, பக்தி செய்ததெல்லாம்கூட நிச்சயம் போகப் போக சரியாகிவிடும்.

பக்தியே செய்யாமல், அதை ஒரு பலவீனமான முட்டாள் தனமாக கருதிக் கொண்டு அகந்தையோடு இருப்பதைவிட வர்த்தக பக்தி, பேராசை பக்தி என்று பக்தி புரிவது தேவலாம்தான். ஏனென்றால், இது ஒருநாள் தெளிவாகி, அதுவே வேகம் தந்து, விட்டதற்கும் சேர்த்துப் பிடிப்பதற்கான ஒரு சக்தியைத் தந்துவிடும். ஆனால், பக்தி பற்றிய எண்ணமே இல்லாமல் அகந்தையோடு இருப்பது, மனிதப் பிறப்புக்கு ஆரோக்கியமான ஒன்றே அல்ல!

பக்திக்கு இப்படி நெடிய விளக்கத்தை பெரியவர் தந்துவிட்டாலும், என்னுள் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. பிரதானமான ஒரு கேள்வி, இந்துமதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுளர்கள் என்பதுதான்.

இதற்கு, பெரியவரின் பதில் அசாத்யமாக மிளிர்கிறது.

‘உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக, விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம், ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் விஷயமறிந்த எந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்யதையும் கருணையும் அதற்கு உண்டு என்று ஒரு ஹிந்து நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி, நம் தேசத்தின் மகாபுருஷர்களுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனை மார்க்கம் எல்லாவற்றையும், இந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்துள்ளனர். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் தான் நாம் அந்த தேவதையின் அனுக்ரகத்தைப் பெற முடியும்.

எந்த தேவதையாக இருந்தாலும் சரி, முடிவில் அது பரமாத்வாவே! தாயைப் போல பகவானைக் காண விரும்புகின்றவனுக்கு அம்பாள் உபாசனை. ஒரே சாந்தத்தில் அமுங்கிப் போக விரும்புகிறவனுக்கு தட்சிணாமூர்த்தி. ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்த கிருஷ்ண பரமாத்மா என்று வகுத்துள்ளோம்.

இதைத்தான் இஷ்டதேவதா வழிபாடு என்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அமைப்பு. அந்த அமைப்புக்கு ஏற்ப, பக்தி செலுத்த உதவுவதுதான் இஷ்ட தேவதா வழிபாடு.

முதலில் நம் மனப்போக்குக்கு ஏற்ப, ஒரு தேவனிடமோ தேவியிடமோ பக்தி உண்டாகிறது. பிறகு, போகப்போக அது மாறி, ‘நமக்கென்று எதற்கு ஒரு மனப்போக்கு?’ என்று விட்டுவிட, அந்த தேவதையே அனுக்ரகம் செய்யும்.

இங்கே முக்கியமான ஒரு விஷயம், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இஷ்ட தேவதா வழிபாடு செய்யும் போது, மற்றவர்களின் வழிபாட்டுத் தேவதையை தாழ்வாக எண்ணக் கூடாது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நம்மில் இரண்டு தெய்வங்கள் சண்டைபோட்டு, ஒன்றை ஒன்று ஜெயித்ததாக புராணத்தில் சம்பவங்கள் உண்டு.

இதை, சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ‘நஹிநிந்தா நியாயம்’ என்று பேர். ஒன்று பலமானது; இன்னொன்று அதைவிட பலம் குன்றியது என்பது இதன் உட்பொருளல்ல.

ஒரு தேவதையை உபாசிப்பவருக்கு, அந்த தேவதையிடம் தீவிரப் பற்று உருவாகிட இதுபோல பௌராணிகர்களால் சொல்லப்பட்டன. இதில் லோகத்தின் மானுட மாயா ரசக்கலப்பு உண்டு. ஒருவகையில் சிறுவர்கள் முன்னால் சில பெரியவர்கள் அவர்களை குஷிப்படுத்துவதற்காக சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்து கைகால்களை உதைத்து விட்டுக் கொள்வார்கள். குழந்தை அதைப் பார்த்து பெரிதாய் சிரித்து மகிழும். இது அந்த அளவிலான ஒரு மனோவியல் சார்ந்த விஷயம்!’ என்று பல தெய்வங்களுக்கான காரண காரியங்களை எளிதாகச் சொல்கிறார் பெரியவர்.

அடுத்து, இஷ்டதெய்வம் போலவே குலதெய்வ விஷயம்! இது நமது மதத்தில் ஒரு ஸ்பெஷாலிட்டியான மிக விசேஷமான விஷயம் என்கிறார் பெரியவர்.

இன்று குலதெய்வம் இல்லாத வீடு இல்லை.

இந்தக் குலதெய்வத்துக்குத் தான் முதல் மொட்டை, காதுகுத்தல்… அடுத்து எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், குலதெய்வத்தை வேண்டித் தொடங்கும் ஒரு பழக்கவழக்கம்.

கல்யாணப் பத்திரிகையில்கூட குலதெய்வ நமஸ்காரமே முதலில்! அடுத்து, குருவின் துணை. ஒரு குல தெய்வமும், ஒரு குருவும் இல்லாமல் ஒரு ஹிந்துவின் வீடு இல்லை.

ஒன்று கருணைபுரிய, ஒன்று வழிகாட்ட! பிசகில்லாமல் நாமும் அதில் நடக்கும்போது, வாழ்விலும் ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.

இதில் கோளாறு வரும்போதுதான், நம் வாழ்விலும் ஏற்ற இறக்கம் வந்து ஆட்டிப் பார்க்கிறது.

இந்த குலதெய்வ தாத்பர்யம் பற்றியும், குருவின் வழிகாட்டல் பற்றியும் பெரியவர் மூலமாகவே நாம் தெளிவு பெறுவோம்.

ஏனென்றால், அதில் தான் அவ்வளவு அர்த்தமும் அருளும் உள்ளது. அது…



நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

No comments:

Post a Comment